பெண்களை மிகவும் ஈர்க்கும், காதல் பிளஸ் மர்மம் என்ற பார்முலாவில் புனையப்பட்ட புதுமையான கதை.
தெய்வீகம் சற்று வெளிப் படையாகவே தன் சூசக தகவல்களை தெரிவித்து வர, அதை நன்கு பயன்படுத்திக் கொள்கிறது ஒரு குடும்பம். ஒரு கட்டத்தில், அவர்கள் பலன்களை தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற பேராசையில் தவறு செய்கின்றனர்.
ஒரு கர்ப்பிணிக்கு காமதேனு காட்சி அளிக்கிறாள். அவளுக்குப் பிறந்த பெண் குழந்தை தெய்வீகமாக பார்க்கப்படுகிறது. அந்த பெண் காதலில் விழுந்தபோது அவளைக் கொன்று விடுகின்றனர் அந்த குடும்பத்தினர்.
அடுத்த முறையும் அந்த குடும்பத்தில் மற்றொரு கர்ப்பிணிக்கு காமதேனு காட்சி அளித்தது. அந்த கர்ப்பிணியின் மகளான தேனுகா என்ற பெண்ணுக்கும் காமேஷ் என்கிற வாலிபனுக்கும் இடையே காதல் தோன்ற, அவர்களது முதல் முத்தம் பெரிய பிரச்னையை ஏற்படுத்தி விடுகிறது.
அவர்களது காதலுக்கு எதிராக இருந்த மனித சக்தி, தெய்வீக சக்தி ஆகியவற்றை கடந்து அவர்களது காதல் நிறைவேறியதா... நடந்தது என்ன... தெய்வீகத்தின் பலன்களை தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற பேராசை வெற்றி பெற்றதா? பரபரப்பான திருப்பங்களும் எதிர்பாரா முடிவும் கொண்ட நாவல்.
நாவல் ஆசிரியர் காலச்சக்கரம் நரசிம்மா, கதாபாத்திரங்களைக் கையாண்டுள்ள விதம், கதையின் போக்கை எதிர்பாரா திருப்பங்களுடன் கொண்டு சென்றுள்ள விதம், தெளிந்த நீரோடை போன்ற நடை ஆகியவை இந்த நாவலை கையில் எடுத்தால் முற்றிலும் படித்து முடிக்காமல் கீழே வைக்கத் தோன்றாது என்பது மட்டும் நிச்சயம்.
– இளங்கோவன்