ஆகஸ்ட் 15. இதே தினத்தில் பிறந்த சத்யா (2000), கல்யாணம் (1922) ஆகியோரோடு அதே தேதியில் பிறந்த சுதந்திர இந்தியாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு புதிய உத்தியில் எழுதப்பட்டுள்ள புதினம்.
நம் நாட்டின் ஆரம்ப கால லட்சியப் போக்கு, ஆயிரமாயிரம் ஆண்டு களாகத் தொடரும் பாரம்பரியம் ஆகியவற்றை மேன்மைப்படுத்தும் விதமாக எழுதப்பட்டு இருக்கிறது. நாவல் என்ற பொழுதுபோக்கு கற்பனை சரடு வழியாகவே நடந்து வந்த மரபுக்கு, ஆகஸ்ட் 15 என்ற சிருஷ்டி மாறுபட்ட புதுமை மகுடம் சூட்டுகிறது.
வலைப் பூவையே கருவியாகச் செய்து, மலரும் மொட்டையும், முதிர்ந்த விருட்சத்தையும் உரையாடச் செய்துள்ளது அருமையான உத்தி. அகிம்சை என்றால் எந்த உயிரையும் கொல்லக் கூடாது; துன்புறுத்தக் கூடாது. பெருமைக்குரிய பெயர்களை பலரும் வைத்துக் கொள்கின்றனர். ஆனால், அவர்களின் செயல்கள் கீழ்த்தரமாகவே இருக்கின்றன.
சுதந்திர தின விழாவை ஆடம்பரமாக கொண்டாடுவதை காந்தி விரும்பவில்லை. லட்சக் கணக்கான மக்கள் பட்டினியில் வாடும்போது, வாண வேடிக்கைகளுடன் இனிப்பை உண்டு விழா கொண்டாடுவதை குற்றமாகவே கருதினார் காந்தி.
காந்திஜி கொலை செய்யப்பட்டபோது இறப்பதற்கு முன், ‘ஹே ராம்’ என உச்சரித்தார் என்ற செய்தி உலகம் முழுக்க பரவி பரவலாகி விட்டது.
ராம் பெயரை உச்சரித்துக் கொண்டே மரணமடைய வேண்டுமென்ற விருப்பத்தை பல தருணங்களில் காந்திஜி கூறி இருந்தார். ஆனால், அன்று சுடப்பட்டபோது ஒரு வார்த்தை கூட அப்படி உச்சரிக்கவில்லை. ஒரு பத்திரிகையாளரின் ஊகத்தின் அடிப்படையிலான இந்த செய்தி, உலகம் முழுக்க நிஜம் போல் மக்களின் மனதில் பதிய வைக்கப்பட்டு விட்டது.
இவ்வாறு மகாத்மா குறித்து அறியாத சுவையான தகவல்களின் தொகுப்பாக மலர்ந்துள்ளது. குறிப்பாக இன்றைய இளம் தலைமுறை கற்றுக் கொள்ள வேண்டிய அனுபவ பாடங்களை விளக்குவதாக அமைந்துள்ளது இந்த நுால்.
– இளங்கோவன்