முகப்பு » கேள்வி - பதில் » அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்! (பாகம் – 6)

விலைரூ.290

ஆசிரியர் : அந்துமணி

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: கேள்வி - பதில்

ISBN எண்:

Rating

பிடித்தவை
இவ்வளவு பிரபலமாக இருக்கிறாரே நம் அந்துமணி... இவருக்கு எவ்வளவு அசையும், அசையா சொத்து இருக்கும் என்பதில் ஆர்வம் கொண்ட வாசகர் ஒருவர், கூச்சப்படாமல் அக்கேள்வியை கேட்டு வைக்க, அவரும் ஒளிவு மறைவின்றி, அக்கேள்விக்கு பதில் தந்துள்ள பாங்கு, ‘இது தான்யா நம் அந்துமணி...’ என்று வியக்க வைக்கிறது.

அது என்ன பதில் என்பதை கடைசியில் சொல்கிறேன். அதற்கு முன், ‘அந்துமணி பதில்கள்’ பாகம் – 6 புத்தகமானது சமீப காலத்து தொகுப்பு என்பதாலும், கொரோனா காலத்து கண்ணாடி என்பதாலும், பதில்கள் மனித வாழ்வியலை துாக்கிப் பிடிக்கின்றன; யதார்த்தமாக வாழ வழிகாட்டுகின்றன.

இதுவரை வந்த பதில்கள் புத்தகத்தில், இது மகுடத்தில் பதிக்கப்பட்ட மாணிக்கம் என்றே சொல்லலாம்; அந்த அளவிற்கு, இதில் யாரும் சொல்லாத பல செய்திகள் உள்ளன.

‘திராவிடத் தலைவர்களின் பகுத்தறிவு முழக்கம் எந்த அளவிற்கு இருக்கிறது?’ என்ற முதல் கேள்விக்கே, ‘அங்காள பரமேஸ்வரியை தரிசிக்கும் அளவிற்கு முன்னேறி இருக்கிறது...’ என்று கேலி, கிண்டல், துணிச்சலுடன் பதில் தந்துள்ளார்.

பொதுவாக கேள்வி கேட்கும் சில வாசகர்கள், அறிந்தோ, அறியாமலோ தங்களுக்கு சாதகமான பதில் தான் வரும்; வர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தான் கேள்வி கேட்பர்.

அவர்கள் மனம் புண்பட வேண்டாம் என்பதற்காக, ‘ஆமாம்; நீங்கள் சொல்வது சரி தான்...’ என்ற பாணியில், மழுப்பலான பதிலை தருவர். ஆனால், அந்துமணி அப்படிப்பட்டவர் இல்லை; மனதில் என்ன நினைக்கிறாரோ அதை தைரியமாக சொல்லக்கூடியவர்.

‘நம்மவர்கள் வெளிநாட்டினர் போல பிறந்த நாளுக்கு, ‘கேக்’ வெட்டி கொண்டாடுகின்றனரே, இது தப்பில்லையா?’ என்ற கேள்விக்கு, ‘இதில் என்ன தப்பு... பிறந்த நாள் அன்று, ‘கேக்’ வெட்டாமல், வடையும், பஜ்ஜியையுமா வெட்ட முடியும்? நல்ல பழக்கங்கள் என்றால், அதை எடுத்துக் கொள்வதில் ஒன்றும் தப்பில்லை; ரொம்பவும் பத்தாம்பசலியாக இருக்க வேண்டாம்...’ என்ற ரீதியில் பதில் தருகிறார். இது, கேள்வி கேட்ட மதுரை வாசகர் ரமேஷுக்கு மட்டுமான பதில் இல்லை; எல்லாருக்குமானது தானே!

திருச்சி வாசகர் மதியழகன், ‘ஆங்கிலேயர்கள் தான், நமக்கு மூளையை – அறிவை கொடுத்தனர் என்கின்றனரே?’ என்ற கேள்விக்கு, ‘யார் சொன்னது? கம்பர், வள்ளுவர், சேக்கிழார், மாணிக்கவாசகர் போன்றவர்களுக்கு இல்லாத அறிவா இந்த ஆங்கிலேயர்களுக்கு இருந்தது?’ என எதிர் கேள்வி கேட்டு சிந்திக்க வைக்கிறார்.

மேட்டுப்பாளையம் சாந்தாமணி என்ற வாசகி, ‘தன் தோழி விடுமுறை விட்டால் போதும்; சுற்றுலா கிளம்பி விடுகிறார். இது வீண் செலவு தானே?’ என்று கேட்கிறார்.

அதற்கு, ‘சுற்றுலா என்பது அறிவை பெருக்கும்; அனுபவத்தை கொடுக்கும்; ஆனந்தத்தை ஊற்றெடுக்கச் செய்யும். இது செய்ய வேண்டிய செலவு. தோழியைப் பார்த்து நீங்களும் கற்றுக் கொள்ளுங்கள்!’ என்கிறார். இதைப் படிக்கும் போது, ஒரு பெட்டியை துாக்கிக்கொண்டு சுற்றுலா செல்லத் தோன்றுகிறது.

இயற்கைக்கு ஊறு விளைவிக்கும் செயல்களை யார் செய்தாலும், அந்துமணிக்கு கோபம் வந்து விடும். சாயப்பட்டறை கழிவு நீரை ஆற்றில் கலக்கச் செய்யும் செயலுக்கு, ஒரு பதிலில் கடுமையாக கண்டனம் தெரிவிப்பதுடன், சம்பந்தப்பட்டவர்களை கம்பி எண்ண வைக்க வேண்டும் என்றும் சீறுகிறார்.

‘உடன் படித்த பள்ளி, கல்லுாரி நண்பர்கள் யாரும் இப்போதும் தொடர்பில் இருக்கின்றனரா?’ என்ற கேள்விக்கு, ‘ஏன் இல்லாமல்...’ என்று சொல்லிவிட்டு, நான்காம் வகுப்பு தோழன் ராஜா, ஐந்தாம் வகுப்பு தோழன் அலாவுதீன் என்று வரிசையாக அடுக்குகிறார். நட்பை போற்றும் இச்செயலுக்கு பெரிய வணக்கம் வைக்கத் தோன்றுகிறது.

‘தம்பதியருக்குள் சண்டை வந்தால், யார் அடங்கிப் போக வேண்டும்?’ என்ற கேள்விக்கு, ‘இதில் என்ன சந்தேகம்... கணவர் தான் அடங்கிப் போக வேண்டும்; பெண்கள் பெரும்பாலும் சண்டை செய்யாதவர்கள்; அதை விரும்பாதவர்கள்...’ என்கிறார் ஆணித்தரமாக!

‘தர்மம் எது?’ என்ற கேள்விக்கு, ‘வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பிக் கொடுப்பது!’ என்று புது விளக்கம் தந்தவர், அதே வேகத்துடன், ‘சொர்க்கம் என்பது கடன் வாங்காமல் இருப்பது!’ என்றும் சொல்கிறார்.

அந்துமணியை தெரிந்தவர்களுக்கு தெரியும்; அவர் ஜாதி, மத பேதம் பார்க்கமாட்டார். ஜாதகம், தோஷம், சந்திராஷ்டம் என்று வருவோரை பக்கத்திலேயே சேர்க்க மாட்டார் என்பது! இந்த முற்போக்கு கொள்கையை அவ்வப்போது வெளிப்படுத்தவும் தயங்கமாட்டார்.

சென்னை வாசகர் முருகன், ‘என் கூட சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். ஆனால், என் வீட்டில் அந்த பெண்ணின் ஜாதியைச் சொல்லி திருமணம் கூடாது என்கின்றனர். நான் என்ன செய்யட்டும்?’ என்று கேட்கிறார்.

‘நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மனதார விரும்புகிறீர்கள் இல்லையா? அப்படியானால், ஜாதியை துாக்கி குப்பைக் கூடையில் போட்டுவிட்டு, அப்பெண்ணையே திருமணம் செய்து கொள்ளுங்கள். ஜாதி மட்டுமல்ல; அதை சொல்லிக் கொண்டு யார் தடையாக வந்தாலும், அத்தடையை உடையுங்கள்...’ என்று வேகம் கொடுக்கிறார். அனேகமாக அந்த வாசகர் இப்போது பிள்ளைகள் பெற்று சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருப்பார்!

‘என் நண்பர் ஒருவர், கணவனை இழந்த பெண்ணுக்கு மண வாழ்வு தர விரும்புகிறார்; உங்கள் கருத்து என்ன?’ என்று கேட்ட வாசகருக்கு, பதில் சுடச்சுட வருகிறது. ‘கருத்து என்ன கருத்து... எப்போது திருமணம் என்று சொல்லுங்கள்... மூன்று நாட்கள் முன்னதாகவே வந்து, மணமகளின் குடும்பத்தின் சார்பாக, நான் நின்று நடத்தி வைக்கிறேன்...’ என்கிறார். யார் தருவார் இப்படியொரு அன்பான நம்பிக்கையான வார்த்தையை!

இவரது பதிலால் நேர நிர்வாகம், சேமிப்பு, நட்பை பராமரிப்பது, சம்பாதிப்பது போன்ற விஷயங்களில் உள்ள நுட்பத்தை அறிந்து தெளிந்தோம். இப்போது, நலம் பல பெற்று வளமுடன் வாழ்கிறோம் என்று பல வாசகர்கள் குறிப்பிட்டு உள்ளனர். என் எழுத்து எனக்கு சம்பாதித்து கொடுத்து வருவது இது தான்; இது போதும் என்று ஒரு பதிலில் நெகிழ்கிறார்.

கொரோனா காலத்தில், நடந்தே தங்கள் இருப்பிடங்களுக்கு சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலரது நிலைமை அப்போது கண்ணீரை வரவழைத்தது. செருப்பு தேய்ந்து ஓட்டை எல்லாம் விழுந்திருக்கும்; இருந்தும் விடாமல் அந்த செருப்புடன் குழந்தைகளை துாக்கிக் கொண்டு, வயதானவர்களையும் தாங்கிக் கொண்டு அவர்கள் நடந்து சென்றது மிகப்பெரிய கொடுமை.

அந்த இடத்தில் நம்மைப் பொருத்திப் பார்த்தால் தான், அவர்களது வலியை முழுமையாக உணர முடியும் என்று சொல்லும் அந்துமணி, புத்தகத்தில் சொல்லாத ஒரு விஷயத்தை, அவருடன் இருந்ததை வைத்து, இங்கே சொல்வது அவசியமாகிறது.

கொரோனா காரணமாக, வீட்டை விட்டு வெளியே வர பயந்து, எல்லாரும் வேலியிடாத குறையாக வீட்டிற்குள் இருந்தே வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, கிட்டத்தட்ட அந்த இரண்டு வருட காலமும், அலுவலகத்திற்கு தவறாமல் வந்தவர் அந்துமணி ஒருவர் தான்; முதல் ஆளாக வருவார்; கடைசி ஆளாக செல்வார்.

இப்படி ஒரு தளபதியாக இருந்து ‘தினமலர்’ படையை தளராமல் நடத்திச் சென்றாலும், இது குறித்து தனக்கு வந்த பாராட்டை புறந்தள்ளி விட்டு, தினமலர் மீது கொண்ட அன்பு, அபிமானம் காரணமாக, அந்த சூழ்நிலையிலும் வீடு வீடாகச் சென்று, தினமலர் நாளிதழை வினியோகம் செய்தவர்களை மனதார பாராட்டி மகிழ்கிறார்.

புத்தகத்தில் அவருக்கே உரித்தான கேலி, கிண்டலுக்கும் பஞ்சமில்லை. ‘தியாகத் தலைவி சசிகலா என்கின்றனரே...அப்படி என்ன தியாகம் செய்தார்?’ என்ற கேள்விக்கு, ‘மதுரையில் திருட்டு வீடியோ கடை வைத்திருந்தார்; ஜெ.,வுடன் சேர்ந்து, அவருக்கு ஊழல் கற்றுக் கொடுத்து, அதன் மூலம் சம்பாதித்த, 913 கோடி ரூபாய் சொத்தை, ஜெ.,யின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக்கிடம் ஐகோர்ட் உத்தரவு காரணமாக இழந்து நிற்கிறாரே... அவர் தியாகத் தலைவி இல்லாமல் வேறு என்னவாம்!’ என்று பதில் தருகிறார்.

எல்லாம் சரி... ‘அந்துமணியின் அசையும், அசையா சொத்து விபரம் தருவதாக சொல்லியிருந்தீர்களே... இன்னும் சொல்லவில்லையே...’ என்று ஆர்வத்துடன் காத்திருப்போருக்கு, அதற்கான பதில் அவரே, 137ம் பக்கத்தில் தந்துள்ளார்.

‘கையும், காலும் தான் என் அசையும் சொத்து; அசையா சொத்து மூளை மட்டுமே!’ என்கிறார்.

இது போல இன்னும் நறுக் சுருக் பதில்கள் புத்தகம் முழுதும் விரவிக் கிடக்கின்றன; படித்துப் பாருங்கள்... சொல்லாமலே பகிர்வீர்கள் பதில்களை மட்டுமல்ல; பதில்கள் தாங்கிய இந்த புத்தகத்தையும் தான்!

– எல்.முருகராஜ்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us