தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மாணவர்கள் எந்த ஒரு தகவல்களையும் அறிந்து கொள்வதில், ‘அப்டேட்’ ஆக இருக்கின்றனர். புதிய புதிய செய்திகளை தேடிப் பறக்கின்றனர். அவர்கள் சிந்திப்பதற்கு துாண்டுகோல் ஒன்று வேண்டும். அது புத்தகமாக அமைந்து விட்டால் பெரியது இருக்க முடியாது.
அப்படிப்பட்ட சிந்தனைப் பொறியை மாணவர்களிடம் பற்ற வைப்பதாக மலர்ந்திருக்கிறது ஆச்சரிய அறிவியல் என்ற புத்தகம். கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த பபூன் குரங்குகள்; சிரிக்கும் புறாக்கள்; வலிக்காத ஊசிகள்; தங்கம் ஏன் தாமிரத்தை தங்கம் என்று கொண்டாடுகிறது போன்ற தலைப்புகளில் தகவல்கள் தரப்பட்டுள்ளன.
வேட்டைக்கு பயன்படும் தவளைகள், பூச்சிகள் எப்படி மூச்சு விடுகின்றன? வண்ணத்துப் பூச்சிக்கு வண்ணங்கள் தெரியுமா? இரும்பு ஏன் துரு பிடிக்கிறது; தந்திரப் பறவை தண்ணீர் நாரை; கழுகை விரட்டும் மீன்கொத்தி பறவை; 500 ஆண்டுகள் உயிர் வாழும் உயிரினம் என சுவைபட தகவல்கள் உள்ளன.
பறக்கும் மீன்கள்; மரத்தில் கிடைக்கும் மீத்தேன்; எழுத்து கூட்டி படிக்கும் குரங்குகள், கறையான்களின் ஏசி வீடு என நாம் இதுவரை கேள்விப்படாத பறவைகள், விலங்குகள், பூச்சிகள் பற்றி அழகிய ஆச்சரியமான அறிவியல் தகவல்கள் தரப்பட்டுள்ளன.
நவீன மொழிநடையில் கட்டுரைகள் அமைந்திருப்பதால் திரில்லான உணர்வுடன் வாசிக்க முடிகிறது. அன்றாடம் கடந்து செல்லும் சம்பவங்களின் பின்னால் உள்ள இயற்பியல், வேதியியல் செய்திகள், அடடே... என்று அப்ளாஸ் போட வைக்கின்றன.
விலங்குகள் குறித்து தமிழில் இது போன்ற நூல்கள் எப்போதாவது தான் வருகின்றன. அந்த வகையில் இந்நுால் முக்கியத்துவம் பெறுகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் என்று அனைத்து தரப்பினரும் படிக்க வேண்டிய புத்தகம்.
– இளங்கோவன்