ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களைக் கூட எளிதாகப் படித்து விடலாம். ஆனால், கந்த புராணத்தைப் புரிந்து கொள்வது மிகக் கடினம். அதை எளிமையாகச் சொல்லி புரிய வைக்க முயற்சித்திருக்கிறது இந்த நுால். எளிய தமிழில், வருவான் வடிவேலன் என்ற பெயரில், 26 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது.
கந்த புராணம் என்பதே போர்க்களம் தான். முருக பெருமானுக்கும், சூரபத்மனுக்கும் நிகழும் அற்புதமான இந்தப் போரை, திருச்செந்துாரிலும், பிற முருகன் தலங்களிலும் நேரடியாகப் பார்த்திருப்போம். ஆனால், போரின் கடைசிக்கட்ட காட்சிகள் அங்கே பாவனையாகக் காட்டப்படும்.
இந்த நுாலிலோ, போர் துவங்கிய நாளில் இருந்து சூரனின் உடல் இரண்டாகக் கிழிக்கப்பட்டு மயிலாகவும், சேவலாகவும் மாறும் வரையான அத்தனை நுணுக்கமான விஷயங்களும் சொல்லப்பட்டுள்ளன. பிரம்மாஸ்திரம், பாசுபதாஸ்திரம், அகோர அஸ்திரம், சிவாஸ்திரம், பிரத்தீங்கிர அஸ்திரம், யோமாஸ்திரம், நாராயணஸ்திரம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
ஆனால், பாட்டி அஸ்திரம் என்று ஒரு மூதாட்டி தந்த அஸ்திரம், கந்தன் -–- சூரன் போரில் பயன்படுத்தப்பட்டதை கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். அந்த அஸ்திரத்தைப் பற்றிய சுவையான தகவல் சொல்லப்பட்டு உள்ளது.
இப்படி வித்தியாசமான தகவல்களை தந்ததால் தானோ என்னவோ, தமிழக அளவில் கவிதை உறவு அமைப்பால், சிறந்த நுாலாகத் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
கந்த சஷ்டி கவசத்தில், ‘ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்’ என்று ஒரு வரி வரும். இதன் பொருள் தெரியாமலே படிப்பவர்கள் பலர். இதற்கு எளிய விளக்கம் இந்த நுாலில் உள்ளது.
– இளங்கோவன்