ஆழ்ந்து கிடந்த மவுனத்தின் உணர்ச்சியாக வெளிவந்துள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். காலத்தால் அழிக்க இயலாத பால்ய நினைவுகள், இளமைக் காதலின் மெல்லிய உணர்வுகள் இழையோடுவதை காண முடிகிறது.
‘உன் கண்மொழி தரும் இதங்கொண்டு உன் மவுனம் தரும் வலிகளுக்கு ஒத்தடமிட்டுக் கொள்கிறேன்’ என புனைகிறது. ‘துணை தவிர்த்த அன்றில் பறவையாய் நித்தமும் உன் நினைவுகளுடன்’ என்று பாடுகிறது. ‘நெடிய இரவு நாளும் வேண்டும் உன் நெஞ்சில் சாய்ந்து துயில வேண்டும்’ என உணர்வை கொட்டுகிறது.
காதலின் நெருக்கம் நெஞ்சில் ஊற்றாய் நினைவுகளின் சாரலாய் பதிவிடப்பட்டுள்ளது. அது மயிலிறகாய் மனதை வருடுகிறது. மரபுக் கவிதைகளுக்குரிய சொற்கட்டுகளுடன் உள்ளது. காதலர் மனதை கவ்வும் நுால்.
– புலவர் சு.மதியழகன்