மேல்மருவத்துார் பங்காரு அடிகளார் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம், ஆற்றிய அற்புதங்கள், நடத்திய ஆன்மிக மாநாடுகள், தெய்வம் இல்லை என மறுத்தவர்களையும் ஆத்திகர்களாக உருமாற்றிய விதம், ஆகமநெறியில் அமையாத கோவிலை உருவாக்கியது, பெண் குலத்தை உயர்வுபடுத்துவதற்காக நடைமுறைப்படுத்திய செயல்கள், சமூகப் பணியாற்றி வரும் சக்தி பீடங்களை உருவாக்கியது, பிரமாண்ட தியான மண்டபம், அன்னதானம் மற்றும் வாழ்வாதாரத்துக்கான நல உதவி திட்டங்கள் குறித்து விளக்கமாக எழுதப்பட்டுள்ள நுால்.
மேல்மருவத்துார் கோவில், ஒரு சமூக புரட்சி செய்தது. ஜாதி, மத வேறுபாடின்றி அனைவரும் இங்கே வரலாம். கருவறைக்குள் சென்று பக்தியோடு அன்னைக்கு அர்ச்சனை செய்யலாம்.
பெண்களை வைத்து வேள்வி செய்யும் அற்புதமும், பெண்கள் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்யும் நடைமுறையும் இங்கே உண்டு.
தமிழ் மந்திரங்களால் கருவறையில் அர்ச்சனைகளும், வேள்வி, கலச, விளக்கு பூஜைகளும் நடைபெறும் திருக்கோவில் இது.
எந்த விழாவானாலும் ஏழை, எளிய மக்களின் வயிறும், மனமும் குளிர வேண்டி அன்னதானமும், ஆடை தானமும் அளிக்கப்படுகின்றன.
விதவையருக்கு தையல் இயந்திரம் வழங்குதல், ஊனமுற்றோருக்கு உதவும் கருவிகள், பசு மாடுகள் வழங்குதல், உழவு மாடுகள் வழங்குதல், உழைத்துப் பிழைக்க எண்ணும் ஏழைத் தொழிலாளர்களுக்கு உதவுகின்ற கருவிகளை வாங்கித் தருதல் போன்ற அறப்பணிகள் கோவில் மூலமாக செய்யப்படுகின்றன.
மேல்மருவத்துார் பற்றி அடிகளாரின் பக்தர்கள் மட்டுமல்லாது, மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய அரிய விஷயங்கள் அடங்கிய நுால்.
– இளங்கோவன்