புதுவயல் செல்லப்பனின் மரபுக்கவிதைகள் அடங்கிய தொகுப்பு நுால். கவிதைகளிலும், பாடல்களிலும் பக்திச்சுவை ததும்புகின்றன.
யாப்பிலக்கணங்களுக்கு உட்பட்டு எழுதப்பட்ட கவிதைகள் அனைத்தும் இனியவை. சந்தங்கள் குன்றாமல் எதுகைகள், மோனைகளுடன் எளிய நடையில் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடலிலும் ஓசை நயம் பாராட்டுக்குரியது.
இறை நம்பிக்கையை வெளிப்படுத்தும் கவிதைகள் ஈர்க்கின்றன. பல இன்றைய சமூகச் சூழல்களை உள்ளடக்கியுள்ளன. நாட்டு நலம் போற்றும் பாடல்களும் உள்ளன. கட்டளைக் கலித்துறை பாடல்களில், தீவினை ஏதுமின்றி இப்பிறவியைக் கடந்து இறைவனடி சேர கடவுளிடம் வேண்டுதல் வைப்பது நெகிழ்ச்சி தருகிறது. சிறந்த சொல்லாட்சிகளோடு புனையப்பட்ட இனிய கவிதை நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு