காவ்யா, 16, இரண்டாவது குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை-24. (பக்கம்: 656.)
"அரசியலில் நேதாஜியையும், ஆன்மிகத்தில் விவேகானந்தரையும் பின்பற்றுங்கள்,' "தேசியம் எனது உடல், தெய்வீகம் என்பது உயிர்,' "வீரமற்ற விவேகம் கோழைத்தனம், விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம்' என்றெல்லாம் முழக்கம் செய்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 40 சொற்பொழிவுகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
"ஆயிரம் சிப்பிகள் சேர்ந்த இடத்தில் ஓர் இடம்புரிச் சங்கும், ஆயிரம் இடம்புரிச் சங்கு கூடிய இடத்தில் ஒரு வலம்புரிச் சங்கும், ஆயிரம் வலம்புரிச் சங்கு கூடிய இடத்தில் ஓர் சலஞ்சலமும், ஆயிரம் சலஞ்சலம் கூடிய இடத்தில் ஓர் பாஞ்ச சன்யமும் இருக்கும்" என கடல் ஆராய்ச்சி கூறுகிறது. அந்த பாஞ்ச சன்யம் தான் கிருஷ்ண பகவான் கையிலிருக்கும் சங்கு என்று சொல்லப்பட்ட மர்மத்தின் முறை (பக்.36) என்று விளக்கும் தேவர்,
"ராமலிங்க சுவாமிகள் அருட்பாவும், அதன் பெருமையும் பின்னால் வரப் போகும் அருளாட்சியில் விளங்கப் போகிறது. அதுசமயம் ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தா, சுவாமி ராமதீர்த்தர், திலகர், நேதாஜி போன்றோர் கனவு கண்ட இந்தியா தோன்றும்' (பக்.82) என்று நம்பிக்கையூட்டி, "பாம்பின் வாய்ப்பட்ட தேரை, மரணவஸ்தையிலிருக்கும் போதும் தன்னருகில் வரும் ஈயைக் கவ்வுவதற்கு வாயைத் திறப்பது போலவே மனிதனுக்கும் ஆசை அவன் ஒழிய மட்டும் இருக்கிறது' (பக்.62) என மரண ரகசியத்தை வெளிப்படுத்தி,
"காஞ்சனத்தின் மூலம் அழிந்தவன் துரியோதனன்' (மகாபாரதம்). "காமத்தின் மூலம் அழிந்தவன் ராவணன்' (ராமாயணம்). ராமாயணம் வைத்திருக்கின்ற புதைப்பட்ட பொருள் தான் "வாதிஷ்டம்' என்கின்ற ஞான நூலாகும். அதேபோல பாரதம் வைத்திருக்கின்ற புதைப்பட்ட பொருள் தான் பகவத் கீதை என்கின்ற அதிஞான நூலாகும்' (பக்.612).
இவ்விதமாக ஏராளமான கருத்துக்களைக் கொண்ட இக்களஞ்சியம் போன்று தேவரின் ஏனைய சொற்பொழிவுகளையும் தொகுத்தால் அது தமிழுக்கும், தமிழருக்கும் பெருமை சேர்க்கும் ஞானப் பெட்டகமாய் விளங்கும்.