மூடப்பழக்கங்களை ஒழிக்க வேண்டும் என்று முழங்கிய சித்தர்களைப் பற்றிப் பல்வேறு மூடக்கதைகள் வழங்கி வருகின்றனவே என்று கவலைப்படுகிற நூலாசிரியர் கதைகளைத் தள்ளிவிட்டுச் சித்தர்கள் கண்ட விஞ்ஞானத்தை வெளிச்சமிட்டுக் காட்ட விரும்பியிருக்கிறார். ஏற்கனவே சித்தர்கள் கண்ட விஞ்ஞானமும், தத்துவமும் என்று சாமி சிதம்பரனார் பொது நிலையில் எழுதி இருப்பதால், தன்னுடைய தேட்டத்திற்கான களமாகச் சிறப்பாகத் திருமந்திரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார் போலும்.பொறியாளரான ஆசிரியர் திருமூலரை உள்ளும் புறமுமாகப் புரட்டிப் பார்த்து பல்வேறு செய்திகளைப் பேசுகிறார். அவர் பேசுகிற செய்திகள் எல்லாம் ஏற்புடையவை என்பதில்லை. ஆனால், அவர் எழுப்புகிற கேள்விகள் ஏற்புடையவை. நம்பிக்கை சார்ந்து பேசாமல் அறிவு சார்ந்து பேசுகிற துணிவுக்காக ஆசிரியர் பாராட்டப்பட வேண்டியவர். பிழிவாக, திருமந்திரத்தை வைதிக நெறிக்கு மாற்றாகவும், தமிழ் நெறிக்கு நாற்றாகவும் முன்வைப்பது ஆசிரியரின் நோக்கம். அட்டைப் படம் தான் ஏதோ கொக்கோக சாத்திரத்துக்குப் போட்டது போல ஆகிவிட்டது.