தமிழாக்கம்: டாக்டர் ஆபத்துக்காத்த சிவதாணு பிள்ள; கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.
ஒரு சிலர், உயர்ந்தவர்களாக இருப்பதால் மட்டுமே ஒரு தேசம் உயர்ந்து விடாது. தேச மக்கள் அனைவரும் உயர்ந்தால்தான் அது, உயர்ந்த தேசம். தொலைநோக்கு, ஒரு சவால்தான். நூறுகோடி மக்களாகிய நாம் அனைவரும் அற்ப விவகாரங்களை மறந்துவிட்டு, ஒன்றுபட்டு, கைகோர்த்துக் களம் இறங்கினால், தடைகள் தவிடுபொடியாகிவிடும். உன்னதமான பாரம்பரியமும் திறமையான உழைக்கும் பட்டாளமும் நிறைந்த இந்திய தேசம் ஓர் அறிவார்ந்த சமுதாயமாக உருவெடுத்து வருகிறது. இப்படியிருந்தும், நமது மக்களில் 26 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாடுகிறார்கள். படிப்பறிவு இல்லாமலும் ஏராளமானவர்கள் வேலை கிடைக்காமலும் திண்டாடுகிறார்கள். செல்வச் செழிப்பான, அமைதியான, பாதுகாப்பான இந்தியாவில் வாழ வேண்டும் என்று சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் ஆசைப்படுகின்றனர். தொழில்நுட்பம்தான் முன்னேற்றத்தையும் சுபிட்சத்தையும் நோக்கி தேசத்தை அழைத்துச் செல்லும் ஆற்றல் வாய்ந்த என்ஜின். 2020ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்பதை சாதிப்பதை அனைத்துத் தரப்பு மக்களும் லட்சியமாக ஏற்க வேண்டும். இளைய தலைமுறையினரின் ஒருமுகமான, ஒன்றிணைந்த முனைப்பு, தடைகளைத் தகர்த்து இந்தியாவை வளர்ச்சியடைந்த தேசமாக உருவாக்கிக் காட்டும். இந்த பூமியின் மிகவும் சக்திவாய்ந்த ஆதார வளம், எழுச்சி ஜுவாலை விடும் இளம் உள்ளம். தேவையான அறிவுத் திறனுடனும் தலைமைப் பண்புகளுடனும் இதற்கு வலிமையூட்டி, வளர்ச்சியடைந்த இந்தியா கனவை நிஜமாக்க முடியும்.