சுந்தர் பதிப்பகம், 2, 29வது தெரு, தில்லை கங்கா நகர், நங்கநல்லூர், சென்னை-61. போன்: 2233 4949. (பக்கம்: 240).
ஒரு மொழியில் ஆழங்கால் படுவதே அரிது. தமிழ் போன்ற செம்மொழியிலும் ஆங்கிலம் போன்ற மிடுக்கு மொழியிலும், அ.சீ.ரா., போன்ற பெருமகன்களுக்குத் தான் வல்லமை வாய்க்கப் பெறும்.
இனிய நடையில், எளிய விதத்தில் அ.சீ.ரா.,வின் வாழ்வையும் வாக்கையும், கவித்துவம் கமழ ஆசிரியர் 21 தலைப்புகளில் தொகுத்து அளித்திருக்கிறார்.
ஆசிரியருடைய தனிப்பட்ட அனுபவங்களை கூறுவதோடு, ஆங்காங்கே ஆ.சீ.ரா.,வைப் பற்றி அறிஞர்கள் கூறியதையும், அவரவர்களுக்குக் கிடைத்த அனுபவங்களையும் ஏடு படுத்தி உள்ளார்.
நூல் நெடுக அ.சீ.ரா., கவிஞராய், ரசிகராய், பேராசிரியராய், நிர்வாகச் செம்மலாய், தமிழறிஞராய், இசை வல்லுனராய், விமர்சகராய், தாயுள்ளம் வாய்ந்தவராய், இயற்கை நேசராய், இலக்கிய வேந்தராய், பேச்சாளராய், பக்திமானாய், இரக்கம் மிக்கவராய், அஞ்சா நெஞ்சராய், நாடக ஆசிரியராய் பரிணமிக்கிறார்.
ஆ.சீ.ரா., மீது நூலாசிரியருக்கு இருக்கும் பக்தியும், பாசமும் வரிக்கு வரி பரிமளிக்கிறது. நல்ல ஆசானுக்கு நன் மாணாக்கர் சமர்ப்பித்துள்ள இலக்கியப் பெட்டகம் இந்நூல்.