சுரா புக்ஸ் பி.லிட்., 1620, `ஜே' பிளாக், 16வது மெயின் ரோடு, அண்ணா நகர், சென்னை-40. (பக்கம்: 302.)
இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற ஒரே இந்தியர், ரவீந்திரநாத் டாகூர். அவர் எழுதிய `கீதாஞ்சலி'யே இந்த பெருமையை அவருக்குப் பெற்றுத் தந்தது. கீதாஞ்சலி ஏற்கனவே அங்கொன்றும், இங்கொன்றுமாய் மொழி பெயர்க்கப்பட்டு தமிழில் வெளி வந்துள்ளது. இருந்தபோதிலும், இப்போது பேகனின் மொழி பெயர்ப்பில் வெளிவந்துள்ள இந்த நூல் கட்டமைப்பில் சர்வதேச புத்தகத் தரத்துக்கு ஏற்ப செம்பதிப்பாகக் கொண்டு வரப்பட்டுள்ளதால், கூடுதலாக, நம் கவனத்தை ஈர்க்கிறது. மேலும் ஆசிரியர் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது போல, வால்மீகியின் ராமாயணத்தை, கம்பன் தமிழில் எழுதியபோது நம் தமிழ் மண்ணின் வாசனை அதிகம் உரைக்கப்பட்டதுபோல, இந்த `கீதாஞ்சலி'யிலும் ஓரளவு தமிழ் மொழியின் ஆன்மாவை தரிசிக்க முடிகிறது. மரபுக் கவிதையின் கவிதை இலக்கணத்தை ஆசிரியர் நேர்மையுடன் கையாண்டிருப்பது, நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. " Words have wooed yet failed to win her'என்பதை `சொற்கள் அவளைக் காதலிக்கத் துணிந்து வீணே தோற்றன காண்!' என மொழிமாற்றம் செய்துள்ள பேகன் பாராட்டுக்குரியவர். டாகூரின் கையெழுத்தில் `வங்காள கீதாஞ்சலி'யை அப்படியே `போட்செட்' பிரதியுடன் ஒரு பக்கம் வெளியிட்டு, மீதிப் பக்கத்தில் ஆங்கில, தமிழ் மொழி பெயர்ப்புக்கள் என புத்தகம் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருப்பதை பாராட்டிக் கொண்டே இருக்கலாம்.