திருமகள் நிலையம், 16, வெங்கட் நாராயணா ரோடு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 282.)
`திருக்குறள்' எனும் தமிழ்மறைக்கு எத்தனை உரைகள், எத்தனை விளக்கக் கட்டுரைகள், எத்தனை ஆய்வு நூல்கள் வந்தாலும் தமிழகம் அந்நூல்களை ஏற்றுப் போற்றும் என்பதில் ஐயமில்லை. இந்நூலில் அறத்துப்பால், பொருட்பால் ஆகிய இரண்டுக்கு மட்டும் அதிகாரத்துக்கு ஒரு குறள் வீதம் - விளக்கவுரை டாக்டர் கலைஞர் எழுதியுள்ளார்.
நூலுக்கு டாக்டர் வா.செ.குழந்தைசாமியும், கவிப்பேரரசு வைரமுத்துவும் அணிந்துரை கொடுத்துள்ளதும், கலைஞர் ஆற்றிய திருக்குறள் தொண்டுகள் குறித்த கால வரிசையான பட்டியலும், கலைஞருக்கும் நூலுக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளன.
அகழ்வாரைத் தாங்கும் நிலத்திற்கு, நபிகள் நாயகம், இயேசுநாதர், அப்பர் பெருமான் ஆகியோரை ஒப்பிடுவது (பக்:16), ஊழ் எனும் சொல்லுக்கு இயற்கை நிலை என்று பொருள் தருவது (பக்:30), கரையுள்ள களமாக தம் குடும்பத்தாரையே நினைவு கூர்வது (பக்:72, 73), நட்புக்கு கர்ணன் கதையை கூறி விளக்குவது (பக்:152-154), ஊதியம் என்ற சொல்லுக்கு குறள் 797, விதுரர் பதவி துறந்த நிகழ்ச்சியை விளக்குவது (பக்.155, 156), `மனை விழைவார் மாண் பயன் எய்தார்' என்ற குறளுக்கு (901) `மனைவியை விரும்புவோர்' என்ற பொருள் பொருந்தாமையை அழகாக விளக்குவது, மருந்தோ மற்று ஊன் ஓம்பும் என்று தொடங்கும் 968வது குறளுக்கு சேரன் கணைக்கால் இரும்பொறை குறித்த கவிதை நடைவிளக்கம் (பக்:211-215) ஆகிய அனைத்தும் ஆசிரியரின் கைவண்ணத்திற்கு, எழுத்தாற்றலுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
அதிகாரம் 22, 213வது குறளுக்கு எழுதியுள்ள விளக்கத்தில், `ஒப்புரவு எனும் பிறர்க்கு உதவும் பண்பைப் போலச் சிறந்த நற்பண்பை இன்றைய உலகிலும் இனி வரும் புதியதோர் உலகிலும் காண்பது அரிது எனக் கண்டறிந்து சொன்ன கற்கண்டுக் குறளுக்கு ஈடேது இணை தான் ஏது?' என்று இருந்தால், இன்னும் தெளிவான கருத்தைப் பெறலாம். (பக்: 22).
`உரையாசிரியர் பலரும் தத்தம் காலத்து நம்பிக்கைகளுக்கும், தாம் சார்ந்த தத்துவங்களுக்கும், வாழ்வியல் ஒழுகலாறுகளுக்கும் ஏற்பக் குறளை வளைத்திருக்கிறார்கள் அல்லது தம்மையே குறளுக்குள் நுழைத்திருக்கிறார்கள்' என்று அணிந்துரையில் கவிப்பேரரசு வைரமுத்து கூறுவது கலைஞருக்குப் பொருந்தும் என்று கூறலாம் சில குறள் விளக்கங்களில் இன்றைய அரசியல் நெடி இருப்பதைத் தவிர்த்திருக்கலாம்; ஏனெனில், கலைஞரின் குறள் விளக்கம் மிகவும் உயர்வானது; காலம் கடந்தும் நிற்க வேண்டிய ஒன்று.
இந்நூல் கலைஞருக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதத்தில் உள்ளது. அனைவரும் படித்துப் பயன் அடைய வேண்டிய அருமையான நூல்.