பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை-600 108. (பக்கம்: ௪௬௪).
* தமிழகத்திற்கும் தமிழ் மொழிக்கும் உயர்வும், பெருமையும் தருவன சங்க நூல்கள் என்று கூறப்படும் பழந்தமிழ் இலக்கியங்கள் ஆகும். அச்சங்க நூல்களின் கருத்தாழமும், தமிழர் பண்பு நலன்களும், இயற்கையோடு இயைந்த வாழ்வு முறையும், உவமை நயங்களும் என்றும் எண்ணி எண்ணி இன்புறத்தக்கவையாகும். அத்தகு பழந்தமிழ் இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப் பாட்டு, சிலப்பதிகாரம், திருக்குறள் முதலிய நூல்களில் காணப்படும் இயற்கை அழகையும், இயற்கை வருணனைகளையும், கற்பனைத் திறனையும் அறிஞர் மு.வ., அவர்கள் மிக அருமையாக இந்நூலில் அளித்துள்ளார்.
இயற்கையை நுணுக்கமாகப் பாடிய புலவர்களின் பாடல்களின் விளக்கங்களும் (பக்., 54-182), இயற்கையால் பெயர் பெற்ற 27 புலவர்களில் சிலருடைய பாடல்களின் விளக்கங்களும் (பக்.183-211), பயிரினங்கள், உயிரினங்கள் குறித்த சங்கப் பாடல்களின் விளக்கங்களும் (பக்.282-359) புத்தம் புதிய கிளர்ச்சியுடன் தெள்ளத் தெளிந்த எழிலுடன் உவமைகளை அமைத்து நம்மை மகிழ்விக்கும் சங்கப் பாடல்களின் விளக்கங்களும் (பக்.360-402) இயற்கையோடு இயைந்த அக்கால மக்களின் வாழ்வியலையும் (பக்.403-447) டாக்டர் மு.வரதராசனார் விளக்கியுள்ள சிறந்த புலமையின் ஆழ, அகலங்களைத் தமிழர்கள் என்றும் தவறாது படித்தறிவது அவர்களின் கடமையாகும்.
டாக்டர் மு.வ.,வின் பி.எச்.டி., என்னும் ஆராய்ச்சிப் பட்டத்தின் ஆங்கில நூலை, மொழி பெயர்ப்பு என்று உணர முடியாத வகையில் மூலநூல் போன்று தந்துள்ள அறிஞர்கள் ம.ரா.போ.குருசாமி, சுப.அண்ணாமலை, கதிர்மகாதேவன் ஆகிய மூவருக்கும் தமிழ் இளைஞர்கள் என்றும் நன்றிக் கடன்பட்டவர்கள் ஆவர். பாரி நிலையத்தாரின் மறுபதிப்பாக 32 ஆண்டுகளுக்குப் பின் வெளியிடப் பெற்றுள்ள இந்நூல், தமிழ் மக்களுக்கு சீரிய நூல் மட்டுமன்று; மிகச் சிறந்த சொத்தும் ஆகும்.