சுதந்திரா பதிப்பகம், 52 ஏ நட்டுக்கால் ராஜா தெரு, ராஜபாளையம்- 626117. (பக்: 520)
"தமிழ்ப் புராணங்களிலும் இதிகாசங்களிலும் நாட்டுப்படலங்களில் நிடதம், கோசலம் முதலிய பகுதிகளைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் வருணனைகள் பயன்படமாட்டா. தற்காலத்தே தமிழ்ப் புலமையிற் சான்று விளங்கும் பெருமக்கள் புதியனவாகத் `தேசபக்திப்பாக்கள் புனைந்தனுப்புவாராயின், அவையும் நன்றியறிவுடன் ஏற்றுக் கொள்ளப்படும்" என்னும் பாரதியின் விண்ணப்பத்தோடு (13.2.190 6) தொடங்கும் இந்நூலின்கண் பாரதியின் இளமைக்காலம் தொடங்கி, சென்னையில் பாரதி (1904 -1908) பாரதியின் சுதேசி இயக்கம், புதுச்சேரியில் பாரதி இப்படி 22 தலைப்புகளில் அவரது அரசியல் வாழ்க்கை வரலாறு சித்தரிக்கப்பட்டுள்ளது.
பாரதியின்`கனவு'க்குத் தடை, பாரதியின் `ஆறில் ஒரு பங்கு' விற்குத் தடை, ஆங்கில ஆதிக்கத்திற்குட்பட்ட தமிழகத்தில் நுழையத் தடை எனப் பல தடைகளைக் கடந்து இன்று இந்தியப் பார்லிமென்ட்டிலேயே படம் திறந்து பெருமைப்படும் அளவிற்கு உயர்ந்து நிற்கும் மகாகவி பாரதியைப் பற்றிய பல அரிய தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. பாரதியின் இதழ்கள் பற்றிய படங்களும், பாரதியாருக்கும் ஆங்கில அரசுக்கும் நடந்த கடிதப் போக்குவரத்தும், தொடர்புடைய ஆவணங்களும் தொகுக்கப்பட்டுள்ளன.
பாரதியின்` கனவு'(சுயசரிதை), `ஆறில் ஒரு பங்கு' (கதை) ஆகியவை பற்றிய முழுமையான ஆய்வுக்கட்டுரைகள் நூலுக்குக் கூடுதல் இலக்கியப் பரிமாணத்தைச் சேர்த்துள்ளது. பாரதியைப் பற்றி படிக்கவும், பாதுகாத்துப் பயன்படுத்திக் கொள்ளவும் கூடிய ஆழ்ந்த ஆய்வு நூலிது