தணல் பதிப்பகம் 39/13, ஷேக் தாவூத் தெரு, சென்னை-14. (பக்கம்: 320)
பேர் பெற்றவர் தன் வரலாற்றை எழுதுவர். ஆனால் "ஊர்' வரலாற்றை "ஊரும் பேரும்' தலைப்பில் சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை போன்றோர் பெயர் ஆராய்ச்சியோடு மட்டும் எழுதியுள்ளனர். ஊரின் ஒட்டுமொத்தமான சமூக, பொருளாதார, இலக்கியப் பின்னணியுடன் எழுதப்படும் ஊர் வரலாற்று நூல்களில் "இளையான்குடி வரலாறு' குறிப்பிடத்தக்கதாகும்.
இளையான்குடி மாற நாயனார் பற்றி சேக்கிழார் எழுதியது ஜவ்வாது புலவரின் சிற்றிலக்கியங்கள், அப்துல் காதிறுப் புலவரின் பாடல்கள், சோழர் காலக் கல்வெட்டுச் செய்திகள், செப்பேட்டுச் செய்திகள் இந்நூலில் விரிவாகத் தரப்பட்டுள்ளன.
500 ஆண்டுகளுக்கு முன் முஸ்லிம்கள் இங்கு வந்து குடியேறிய கதை விளக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள், வணிக முறைகள், அரசியல் தொடர்பு, விளையாட்டு வளர்ச்சி, மருத்துவமனைகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
இன்றைய, "நிக்காஹ்'ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுவதும், "தலாக்' சொல்லி விலக்கி வைப்பதும், சுன்னத் முறைகளும், உணவுப் பழக்கங்களும், இரவில் நடக்கும் திருமணமுறைகளும் வீடியோ காட்சிகள் போல படிப்பவர் மனதில் ஓட வைக்கிறது இந்நூல்! மலேசியா, பர்மா, போன்ற நாடுகளுக்குச் சென்றவர்கள், மற்றும் வாழும் எழுத்தாளர்கள் பற்றிய விரிவான புள்ளி விவரப்பட்டியல் நீண்ட வரிசையில் தரப்பட்டுள்ளன.ஒரு ஊரையே ஒரு நூலில் அடக்கி விடலாம் என்பதற்கு "இளையான்குடி வரலாறு' உதாரணமாகும்.