உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-18. (பக்கம்: 120.)
ஒரு இலக்கியப் படைப்பாளி, தனது சக எழுத்தாளர் நண்பர்கள் குறித்து ஏட்டில் வார்ப்பது கூரான கத்தி முனை மீது நடப்பதைப் போன்றதே! ஒருவரை நன்கறிந்து, நெடு நாட்கள் அன்னியோன்னியமாகப் பழகியதுடன், இலக்கியச் சிந்தனைகளைப் பரிவர்த்தனையும் செய்த பின்னர், அவர் தம் பழக்க வழக்கங்கள், பலம் - பலவீனங்கள் மற்றும் இதர குணவியல்புகளைத் துல்லியமாக ஸ்கேன் செய்து 15 இலக்கியவாதிகள் பற்றிய தமது மனப்பதிவுகளை நம்முடன் ஆசிரியர் பகிர்ந்து கொள்கிறார்.இலக்கிய ரசனையுடன் சுவாரசியமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்நூல், மதுரைவாசிகளுக்கே உரித்தான சொல்லாடல்களுடன் கேலியும் கிண்டலும் கலக்கப்பட்ட நகைச்சுவை விருந்தாகவும் அமைந்துள்ளது. அவற்றில் சில: சர்க்கரை சேர்க்காத, நாக்கில் ஒட்டும் பில்டர் காபிப் பிரியரும், தமாஷ் பேர்வழியுமான பிரபஞ்சன்.தமிழ்க் கவிதையுலகில் கம்பீரமாகக் காட்சி அளித்தாலும் கலாப்ரியா ஒரு அப்பாவிக் கவிஞர்.அரை நூற்றாண்டுக்கும் மேலாக எழுதிக் குவித்த சுந்தர ராமசாமி நகைச்சுவை ததும்பும் மேடைப் பேச்சாளர்.மேலும் சிறந்த பத்திரிகையாளரான மணா, ப.சிங்காரம், கோணங்கி, யவனிகா, கந்தர்வன், அப்பாஸ் போன்ற முன்னணிப் படைப்பாளிகளும் இந்நூலில் உலா வருகின்றனர்.