வள்ளலார் அன்பு நிலையம், மலேசியா. (பக்கம்: 1150).
உலகத் தமிழர் பண்பாட்டுக் களஞ்சியம் என்ற இந்நூல் இரண்டு பாகங்களாக 1150 பக்கங்கள் கொண்ட ஒரு தொகுப்பு நூல். முதல் பாகம் வரலாற்றியல் என்றும், இரண்டாம் பாகம் வாழ்வியல் என வகுத்துத் தயாரித்துள்ளார் ஆசிரியர். முதற்பதிப்பு 1997ல் வந்துள்ளது. இப்பதிப்பு சில திருத்தங்களுடன் இரண்டாம் பதிப்பாக தற்போது வந்துள்ளது. புலம் பெயர்ந்த தமிழரால் மலாய் மண்ணிலிருந்து இவ்வறிய தமிழர் வரலாற்றுக் களஞ்சியம் உதயமாகியிருக்கிறது.
முதற்பகுதி வரலாற்றியல் என பண்பாட்டு முரசுகள் எனத் துவங்கி அதில் ஆறு ஆய்வுக் கட்டுரைகளும், ஒன்று முதல் ஐந்து இயல்களில் 56 கட்டுரைகள் பல்வேறு தலைப்புகளில் 620 பக்கங்களில் பல தமிழ் இலக்கிய ஆய்வாளர்களது ஆய்வுக் கட்டுரைகளைப் பெற்று பதிவு செய்துள்ளார். தமிழர் வரலாறு, பண்பாடு, இலக்கியங்களில் பண்பாடு, நாட்டுப்புறவியல் பண்பாடு, அறக்கோட்பாடுகளில் தமிழர் பண்பாடு, சமய வாழ்வில் தமிழர் பண்பாடு என ஐந்து தலைப்புகளில் 56 கட்டுரைகள் உள்ளன. மொழி ஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் முதல் தொகுப்பாசிரியர் முனைவர் தமிழ்க்குயில் கா.கலியபெருமாள் வரை வரலாற்று ஆவணங்களின் குறிப்புகளோடு ஆய்வுக் கட்டுரைகள் தந்துள்ளனர் இந்நூலில்.
இரண்டாவது பகுதி வாழ்வியல். இதில் ஐந்து இயல்கள், ஒப்பன்னக் கலையில் தமிழர் பண்பாடு, தமிழர் பண்பாட்டில் மீட்டுருவங்கள், தமிழர் பண்பாட்டில் ஊடாட்டங்களும் பின்னடைவுகளும், இல்லற வாழ்வில் தமிழர் பண்பாடு, தமிழர் வாழ்வில் புதிய பண்பாடு எனப் பொதுத் தலைப்பில் நாற்பத்தைந்து கட்டுரைகள் 513 பக்கங்களில் 45 முனைவர்கள் தந்துள்ளதைப் பதிவு செய்துள்ளார். உண்மையிலேயே தமிழனின் ஒட்டுமொத்தமான வாழ்வியல் ஆவணக் குறிப்பு. இந்நூல்கள், தமிழகம், புதுவை போன்ற மாநிலப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றுகின்ற முனைவர்களிடத்திலே பெற்ற கட்டுரைத் தொகுப்பு நூல். ஏறத்தாழ 17 ஆண்டுகள் உழைத்து திருத்திய செம்பதிப்பாய் இந்நூலைக் கொண்டு வந்துள்ளார் முனைவர் தமிழ்க்குயில் கா.கலியபெருமாள்.
தமிழில் இதுநாள் வரை இதுபோன்ற ஒரு தொகுப்பு நூல் வந்ததில்லை. நல்ல உயரிய தாளில் அச்சிட்டு, பிழைகள் இல்லாது தயாரித்துள்ளார். ஒவ்வோர் தமிழர் வீட்டின் நூலகத்திலும் இருக்க வேண்டிய வரலாற்று ஆவணம், நாளைய தலைமுறையினருக்கு ஒரு வழி காட்டி நூல்.