திருமகள் நிலையம், 18, வெங்கட்நாராயணா சாலை, தி.நகர், சென்னை-600 017. போன்: 91-44-237-24747.
"என் தம்பி வைரமுத்து' கவிப்பேரரசு வைரமுத்துவின் நூல் வெளியீட்டு விழாக்களில், முதலமைச்சராகவும், மூத்த சகோதரராகவும் விளங்கும் கலைஞரின் சொற்பொழிவுகள் அடங்கிய தொகுப்பு. என்றாலும், இவை சொற்பொழிவுகளாக மட்டும் இல்லாமல் 1989ல் "எல்லா நதியிலும் என் ஓடம்' தொடங்கி 2007ல் "கருவாச்சி காவியம்' வரை கவிஞர் வைரமுத்து
எழுதிய கவிதைகள், நாவல் கள், மொழிபெயர்ப்புகள், விமர்சனங்கள் ஆகியவற்றைப் பற்றிய கலைஞரின் திறனாய்வுகளின் தொகுப்பு என்று தான் சொல்ல வேண் டும்.
இடைப்பட்ட 20 ஆண்டுகளில், கலைஞரின் வாசிப்பு அனுபவங்களின் விகசிப்பும் கவிஞரின் படைப்பாக்கத்தின் பரிணாமங்களும் இத்தொகுப்பு மூலம் வெளிப்படுகின்றன.
"இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல', "தண்ணீர் தேசம்', "தமிழுக்கு நிறம் உண்டு', "பெய்யெனப் பெய்யும் மழை', "வைரமுத்து கவிதைகள்', "கள்ளிக்காட்டு இதிகாசம்' உள்ளிட்ட பதினொரு விழாக்கள், பதினைந்து நூற்கள், பத்தொன்பது வருடங்கள் இருவரது இலக்கியப் பயணத்தின் வேகமும் வீச்சும் ஆர்வமும் ஆழமும் இதனால் தெரிய வருகின்றன.
சினிமா ஒரு சந்தை, இதற்குள்ளே தமிழ் செய்ய முடியாது என்பதில் இருவருக்கும் இருவேறு கருத்துக்கள் இல்லை. அத்துடன் சந்தைக்கு வெளியே தமிழ் செய்ய முடியும் என்றும் இருவருமே நம்புகின்றனர். நம்புவதோடு நற்றமிழுக்கும் நல்ல பல வினைகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். கலைஞர் தமிழைச் "செம்மொழி' ஆக்கினார் என்றால் கவிஞரோ தமிழைச் "செழும் மொழி' ஆக்கி வருகிறார்.
கலைஞரிடம் கவிஞனாக அறிமுகமாகிக் கவிப்பேரரசாக வளர்ந்த, வாழ்ந்த வரலாறு இதில் உள்ளது.
("பெய்யெனப் பெய்யும் மழை' நூல் வெளியீட்டு விழா'
முதலமைச்சராக இருக்கும் போதும் வருகிறார்; முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்ட காலங்களிலும் வருகிறார்
("ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்', "காவி நிறத்தில் ஒரு காதல்', "இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்' உள்ளிட்ட ஐந்து நூல்களின் வெளியீட்டு விழா) சென்னை என்றாலும் வருகிறார்; மதுரை என்றாலும் வருகிறார்; தனியாக வரச் சொன்னாலும் வருகிறார் ("தமிழுக்கு நிறம் உண்டு' விழா); ஓ.... எவ்வளவு இணக்கம், எத்துணை ஈடுபாடு இருவருக்கும்.
கலைஞரின் அணுகுமுறை அல்லது ஆய்வு முறை என்பது ரசானுபவம் தான், ரசானுபவம் என்றாலும் பொருத்தம் தான். நல்ல ரசிகர்கள் தான் நல்ல விமர்சகராகவும் இருக்க முடியும் என்பதற்குக் கலைஞரின் சொற்பொழிவுகளே சான்றுகள்.
பாற்கடலைப் பழைய பனை ஓலைகளாலேயே கடைந்து இலக்கிய அமுதங்களைப் பரிமாறும் புதிய பரந்தாமனாயிற்றே கவிஞர் வைரமுத்து. இரட்டை நாயனங்களின் இன்பமும் இரு தண்டவாளங்களின் இணைவும் இவர்களிடையே இயைந்திருக்கும். அண்ணனுக்கேற்ற தம்பி; தலைவருக்கு ஏற்ற நம்பி.
இந்நூலில், "இங்கிவரை யான்பெறவே' என்ற கலைஞரைப் பற்றிய கவிஞரின் முன்னுரை ஒரு திலகம்.
என்ன சொல்ல? இருவரையும் ஒருவரோடு ஒருவர், ஒருவருக்காக ஒருவர், ஒருவரால் ஒருவர். எவ்வளவோ சொல்லவேண்டும்! என்றாலும் ஒன்று சொல்லத் தோன்றுகிறது. கலைஞரும் ஒரு கவிஞர்; கவிஞர்களை வளர்த்தெடுக்கும் கவிஞர்.
ஆனால், கவிப்பேரரசு அவர்களே, தமது 85 வயதில் 70 ஆண்டு இலக்கியப் பயணத்தில், எத்தனையோ
கவிஞர்களைக் கடந்து வந்த கலைஞர் ஒரே ஒரு
கவிஞரைப் பற்றி இத்தனை ஆழமாக, விரிவாக, செறிவாக யாரையுமே கொண்டாடியதுமில்லை. பதிவு செய்ததுமில்லை. அது உங்களுக்கு வாய்த்திருக்கிறது. உங்கள் இலக்கிய வரலாற்றில் யாருமே தொட முடியாத சிகரம் தான் இது.