மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600 108 . (பக்கம்: 566.)
திருமூர்த்தி மலைக்கும் - உடுமலைப்பேட்டைக்கும் இடையில் இயற்கை எழிலுடன் விளங்கும் பள்ளிபுரம் கிராமத்தில், "எழு திங்கள்' சீர் என்ற முழக்காத குலநியதிக் குடும்ப நிகழ்ச்சியில், கோவில் வழிபாடு முடிந்து, பங்காளிகள் கத்தி, கேடயம் எடுத்துக் கொண்டும், மாமன் மைத்துனர்கள் வில், அம்பு எடுத்துக் கொண்டும் உண்மைப் போர்ப் போல பொய்யாக ஆடும் ஆட்டம் "படுகளம்' எனப்படும்.
இந்தப் பாரம்பரிய ஆட்டத்தை மையமாக வைத்து, பகைகொண்ட மூன்று குடும்பங்களில் கதையை, பகையாளிக் குடியை உறவாடிக் கெடுப்பதான குருவில் முழக்க முழக்க கொங்கு மண் வாசனை வீச நாவலை புனைந்துள்ளார் நூலாசிரியர்.
""ஏறக்குறைய இந்தியாவின் வடிவம்'' (செட்டிக்குளம்) என அறிமுகந்தந்து, ""கூடுபிரிந்து கூத்தம்பூண்டி ஆத்தாள் குடும்பத்தில் வெடிக்கவிருந்த பூகம்பம் சிறிய புகைச்சலுடனும், கண்கலங்கலுடனும் முடிந்தது! தனிக்குடித்தனம் ஒன்றில் வறுமை வலம் வரப் பிள்ளையார் சுழியும் விழுந்தது!'' (பக்.32) என குடும்பச் சூழலை நயம்பட விளித்து, வெட்டியகரும்பு வெல்லக்கட்டியாகும் நிகழ்வுகளை லாவகமாகக் கையாண்டு, அணை கட்டும் முறைமை, நோம்புசாட்டு, படுகளம் (489), விக்கிர வண்ணனை (441) திருமூர்த்திமலை தல வரலாறு (238) போன்றவை நாட்டுப்புற நடையிலேயே அழகுற விளக்கப்பட்டுள்ளன.
""ஒரு புதிய தொழிலைத் தொடங்கி விஞ்ஞான முறைப்படி செய்வது போல இருந்தது'' (168) என அறிவியல் செய்தியைப் படரச்செயது, ""ஊருக்கூரு சண்டை போட்டு இப்ப இல்லாமப் போனவங்கதானே பாண்டிய, சேர, சோழனெல்லாம்!'' (பக்.174) என வரலாற்றைப் பதிய வைத்து, ""எதிலயும் ஒரு போட்டி இருந்தாத்தான் எல்லாரும் கவனமா இருப்பாங்க'' (208) எச்சரிக்கை செய்து,
""சுதந்திரத்துக்கு முன்னால வெள்ளக்காரங்க சதி செஞ்சாங்க. இப்பப் பணக்காரங்க சதி செய்யறாங்க'' (239) என யதார்த்தமாக தம் எழுத்து யுத்திகளை ஆங்காங்கே விதைத்துள்ளது இலக்கிய வளமையைக் காட்டுகிறது.
""பொறாமைத் தீப்புகையில் மூச்சுத் திணறிக் கொண்டிருந்த கவுண்டர் கூட்டத்தில், ஒரு அதிசயக்காற்று அந்தப் புகையைத் தூரத்துக்குத் தள்ளிவிட்டிருந்தது'' (319) ""ஒரு புதிய உணர்வில் அந்தக் காளை தன் வாலை இரை விழுங்கிய பாம்பின் வால் போல மெதுவாக நெளித்தது'' (509) என்று கற்பனை மிக்க இயற்றமிழும், நாட்டுப்புறப் பாடல்களைக் கையாண்டு (170 - 204) இசைத்தமிழும், நாடக நளினத்தை (303) "ஞானசுந்தரி' வாயிலாக இழையோடச் செய்து முத்தமிழும் கமழும் இந்நாவலில் நாயகன், நாயகியோ, காதல் நிகழ்வுகளோ இல்லை என்பது தான் தனிச்சிறப்பு.
பண்பட்ட எழுத்தில் முகிழ்ந்த இப்புதினம் நூலாசிரியரின் நெடுநாளைய மன அசைவுகளின் பிரதிபலிப்பாய்த் தோன்றுகிறது. ஏராளமான பாத்திரப்படைப்பு என்றாலும், வாசகனின் மனத்தை அழுத்தமாக ஆக்கிரமித்துக் கொள்ளும் கதையம்சமும், நடைவளமும் கொண்டது. பாராட்டத்தக்க வித்தியாசமான முயற்சி. படித்துச் சுவைக்கலாம்.