பூம்புகார் பதிப்பகம், 127 (ப.எண் 63), பிரகாசம் சாலை, (பிராட்வே) சென்னை-600 108. (பக்கம்:541.)
கொங்கு நாடு என்பது இன்றைய கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி மாவட்டங்களும், திருச்சி மாவட்டத்து கரூர், குளித்தலை வட்டங்களும், மதுரை மாவட்டத்து பழனி, திண்டுக்கல் வட்டங்களும் அடங்கிய பகுதியைக் குறிக்கும். கொங்கு என்பது பூந்தாது, மணம், தேன் என்று பலபொருள்களைத் தரும் சொல். பண்டைக் காலத்தில் இந்தப் பகுதியில் மரச்செடி கொடிகள் மிகுந்து, தழைத்துப் பூத்து மணம் கமழ்ந்ததாலும், தேன் மிகுதியாக இருந்ததாலும் முன்னையோர் இந்நாட்டிற்குக் கொங்கு நாடு என்று பெயரிட்டனர்.
கொங்கு நாட்டுப் பொதுப் பகுதி, தமிழக வரலாறு, கொங்கு நாட்டு வரலாறு என்று மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு ஆசிரியர் இந்த நூலை அரும்பாடுபட்டு எழுதியிருக்கிறார். மிகவும் பாராட்டத்தக்க முயற்சி. கொங்கு நாட்டின் அரசியல் தமிழ்நாட்டு அரசியலுடன் முழுதும் தொடர்பு உள்ளதால், தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றையும் ஒரு புதிய முறையில் எழுதியுள்ளதாக ஆசிரியர் குறிப்பிடுகின்றார். இது தமிழக வரலாற்றுப் பேராசிரியர்கள் கவனத்திற்கு உரியது.