இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், சென்னை-12. (பக்கம்: 264)
இந்த புத்தகம் இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளையின் நிதி உதவியுடன் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகத்தின் தலைப்புக்கும், உள்ளே உள்ள விஷயங்களுக்கும் ஏழரைப் பொருத்தம். முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் வடபுலத்தில் படையெடுத்து, சில குறுநில மன்னர்களைத் தோற்கடித்துச் செல்வங்களைக் கொள்ளையடித்து, ஆளும் காலம் வரை அக்கிரமம் செய்துவிட்டு, சுரண்டிய செல்வங்களுடன் சொந்த நாட்டுக்கு ஓடி போய்விட்ட சம்பவங்கள் புத்தகம் முழுவதும் ஏராளமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்தப் புத்தகத்தில் 136வது பக்கத்தில் தைமூர் பதினைந்தே நாட்கள் ஆட்சியில் அமர்ந்து செய்த அட்டூழியங்களைப் பற்றி ஆசிரியர் எழுதியுள்ளதைப் படிக்கும்போது, வாசகனின் இதயம் ஆயிரம் மடங்கு வேகத்தில் இயங்காமல் இருந்தால் தான் ஆச்சரியம்.
தைமூர் ஓராண்டு காலம் இந்தியாவில் நடத்திய காட்டுத் தர்பாரில் லட்சக்கணக்கான மக்கள் காரணமின்றி கொல்லப்பட்டனர்.
சுல்தான் பைரோஜ் ஷா துக்ளக் நாற்பது ஆண்டுகால நகர (டில்லி) வளர்ச்சி குரங்கின் கையில் அகப்பட்ட பூமாலை போலவும், மத யானை புகுந்த கரும்புத் தோட்டம் போலவும் ஆயின. இவன் செய்த கொடுமைகளைச் சீர் செய்ய அடுத்து வந்த முஸ்லிம் மன்னர்களுக்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டன. மேலும், முகமது கஜினி கொள்ளையடித்தார்; கோயில்களை இடிக்கவில்லை என்ற தகவலும் உண்டு. அக்பர், ஹுமாயூன், ஜஹாங்கிர் ஆகிய முஸ்லிம் மன்னர்கள் ஆட்சிக்காலத்தில், மிகக் குறைந்த, மிகச்சிறிய அளவு இந்திய மக்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய சில முன்னேற்றங்களை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். இருந்தபோதிலும், புத்தகத்தை படித்து முடித்தவுடன், முஸ்லிம் மன்னர் ஆட்சிக் காலத்தில் இந்தியா முன்னேற்றமடைந்ததாகச் சொல்ல இயலாது. அப்படியே ஏதேனும் முன்னேற்றம் என குறிப்பிடலாம் என்றால், அவையனைத்தும் முஸ்லிம் மன்னர்களின் சொந்த நலனும், சுயலாபமும் கலந்ததாக இந்தப் புத்தகத்தில் காணக் கிடக்கிறது.அதனால்தான் கடந்தகால நிகழ்ச்சிகளின், அனுபவங்களின் தொகுப்பு இந்த நூல் என்று முன்னுரையில் கூறப்பட்டுள்ளது போலும்!