நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41.பி. சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 98 (பக்கம்: 203)
இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம் சிந்தூர். நதிக் கரையோரம் அமைந்திருக்கும் இந்தக் கிராமத்திற்கு, அணைக்கட்டு வடிவில் வருகிறது ஆபத்து. தவழ்ந்து, வளர்ந்த தாய் மண்ணைப் பிரியமனமில்லாமல், கோவிந்த் பாயி அவரது மகன் சிமன் தலைமையில் பழங்குடி மக்கள் எதிர்ப்புக் குரல் எழுப்புகின்றனர்.
சுற்றுப்புறச் சூழல், இயற்கை வளங்கள் சீரழிந்து போகும் என்பதால், சமுக ஆர்வலர்கள் ராதா, சந்தீப், நிதின், அரசு அதிகாரி சுதிர் அவரது மனைவி யூதிகா ஆகியோர் அணைக்கு எதிரான போராட்டத்தில் தங்களையும் இணைத்துக் கொள்கின்றனர்.
அரசை எதிர்த்துப் போராடி, அப்பாவி மக்கள் ஜெயிக்கத்தான் முடியுமா...? அழகிய சிந்தூர் கிராமம், கொஞ்ச கொஞ்சமாய் சூறையாடப்படுகிறது.சுயநலவாதிகளால், இயற்கை வளம் எந்தளவுக்கு சீரழிக்கப்படுகிறது என்பதை, பக்கங்கள் ஒவ்வொன்றும் படம் பிடித்துக் காட்டுகின்றன. முதல் பக்கம் துவங்கி... கடைசிப்பக்கம் முடியும் வரை முடிந்து சில நாட்கள் கழிந்தப் பிறகும் நம்மையும் சிந்தூர் கிராமவாசிகளுள் ஒருவராக்குவது நூலாசிரியரின் எழுத்தாற்றலுக்குச் சான்று.
நாகரிக கசடுகள் எதுவும் அணுகாத அமைதியான பழங்குடி மக்களுக்கு எதிரான சமுக அவலங்கள் ஆணியடித்தது போல, மனதில் இறங்குகிறது... மனதை ரணமாக்குகிறது. கதையில் கையாளப்பட்டிருக்கும் பாத்திரங்கள்... சம்பவங்கள், இயற்கை வளத்தை நாம் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை கொஞ்சம் உரக்கவே சொல் கின்றன.
வாசிப்பை நேசிப்பவர்கள், தவற விட(வே) கூடாத நூல்!