செந்தமிழ்வாணன், உழவு அச்சகம், அரச்சலூர், ஈரோடு மாவட்டம். (பக்கம்: 392)
கொங்கு மண்டலத்தில் "ரா.கி.. "ஐயா' என அன்புடன் அழைக்கப்பட்டவர் கோவை கணபதி ரா.கிருஷ்ணசாமி கவுண்டர். விவசாய குடும்பத்தில் பிறந்த அவர், விவசாயப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் பல புதிய உத்திகளை மேற்கொண்டவர். "ஏர் உழவன்' உட்பட விவசாயப் பத்திரிகைகளை சிறப்பாக நடத்தியவர்.
வேளாண் விளைப் பொருட்கள் மீது விலைக்கேற்ப வண்ணக் கோடுகள் போட்டு விற்கும் "பார் கோடு சிஸ்டம்' முறையை அக்காலத்திலேயே ரா.கி., அறிமுகப்படுத்தினார் என்ற தகவல் இந்த நூலில் உள்ளது.
கோவை நகரில் "மோரீஸ்' வாழைப் பழத்தை அறிமுகப்படுத்தியதும், மாட்டு சாணத்தில் இருந்து "மீதேன்' வாயு எடுத்து சமையலுக்கு பயன்படுத்தலாம் என கண்டுபிடித்தவரும் இவரே ஆவார்.
கடந்த 1930ல் பஸ் போக்குவரத்து தொழிலில் ரா.கி., ஈடுபட்டபோது "அதிசய மனிதர்' ஜி.டி.நாயுடுவுடன் ஏற்பட்ட பிணக்கு குறித்தும் பிறகு இவ்விரு துருவங்களும் நட்புணர்வு கொண்டது பற்றியும் நூலில் சுவையாகவும், ஒளிவுமறைவின்றியும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
ஈ.வெ.ரா.,வுடன் கருத்தளவில் ஒன்றிப் போகாதவர், ஆனால், இருவரும் சந்தித்தது, பேசியது, ஈ.வெ.ரா.,வை மவுனம் ஆகச் செய்த செயல் (பக்:114) ஆகியவை ரா.கி.,யின் துணிச்சலையும் அறிவையும் படம் பிடிக்கும் தகவல்கள்.
தெளிவான நடை, "பளிச்' அச்சு, நேர்த்தியான வடிவமைப்பு, ஆங்காங்கே குறள், புதுக்கவிதைகள், சினிமா பாடல் வரிகள் பொருத்தமாக குறிப்பிடப்பட்டுள்ளது சுவாரஸ்யத்தை கூட்டுகிறது.
பன்முக மனிதராக நெறி தவறாது பண்பாளராக வாழ்ந்து மறைந்த ஒரு வெற்றியாளரின் வாழ்க்கை வரலாறு இது. முயன்று முன்னேற துடிப்பவர்கள் படிக்கலாம்.